செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

அதிபுத்திசாலி யார்...?

ஆஹா...இதுவன்றோ மெய்யறிவு...!
***********************************

நபிமொழிக் கலையிலும் இஸ்லாமியச் சட்ட அறிவிலும் 
திருக்குர்ஆன் விரிவுரைக் கலையிலும் 
மாபெரும் ஆற்றலைப் பெற்றிருந்தவர் 
அப்துல் லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) எனும் அறிஞர். 


இவர் மார்க்க அறிஞராக மட்டுமின்றி 
மாபெரும் வணிகராகவும் திகழ்ந்தார்.



ஒருநாள் அவர் தம் வணிகம் தொடர்பாக 
மற்றொரு நகரத்துக்குச் சென்று கொண்டிருந்தார். 


வழியில் ஒரு காடு. அதைக் கடந்துகொண்டிருந்தபோது
அங்கே ஓர் இளைஞனைக் கண்டார். 



அறிவொளி வீசும் இளைஞரின் முகமும் கண்களும் 
அவரைப் பெரிதும் கவர்ந்தன. 


இவன் காட்டில் இருப்பதால் 
அறிஞர்களின் தொடர்பு கிடைக்க வழி யில்லையே. 

அதனால் இவனுடைய கல்வியறிவு 
பாதிக்கப்பட்டிருக்குமேஎன 
அப்துல்லாஹ் இப்னு முபாரக் கருதினார். 


அவர் அந்த இளைஞரிடம் பேச விரும்பினார். 


தம்பி, நீ ஏதாவது கல்வியறிவு பெற்றிருக்கிறாயா? 
அல்லது வீணே காலத்தைக் கழிக்கின்றாயா?” 


தன்னிடம் வலிய வந்துபேசும் அவரை 
ஏறிட்டு நோக்கிய இளைஞன் பிறகு 
அமைதியாகச் சொன்னான்:


நான் அதிகம் படித்தவனல்லன். ஆயினும் 
நான்கு விஷயங்கள் பற்றிய அறிவைப் பெற்றுள்ளேன். 
சிரம், செவி, நாவு, உள்ளம் ஆகிய 
நான்கைப் பற்றியும் நன்கு அறிந்துள்ளேன்



இளைஞனின் மறுமொழி 
அவரைப் பெரிதும் வியப்புக்குள்ளாக்கியது. 
அந்த நான்கு அறிவைப் பற்றிக் 
கொஞ்சம் விளக்கும்படி கேட்டுக் கொண்டார்.


அல்லாஹ்வின் சந்நிதியில் 
தாழ்ந்து நின்று வணங்குவதற்காகத்தான் தலை. 
இறைவாக்குகளைக் கேட்பதற்காகத்தான் காதுகள். 
அவன் புகழைப் பாடவே நாவு. 
அவன் நினைவைப் பதித்துக்கொள்ளவே உள்ளம்.



அறிஞர் அப்துல்லாஹ் இப்னு முபாரக்கின் 
வியப்பு எல்லை கடந்தது. 


மாபெரும் இஸ்லாமிய அறிஞரான அவர் 
அந்த இளைஞனிடம் தம்பி, எனக்கு ஏதேனும் 
அறிவுரை கூறுவாயாகஎனத் 
தாழ்மையுடன் வேண்டிக் கொண்டார்.



பெரியவரே, தாங்கள் யார் என்று எனக்குத் தெரியாது. 
ஆயினும் தங்களின் தோற்றத்திலிருந்தும் பேச்சிலிருந்தும் 
தாங்கள் மிகச் சிறந்த அறிஞராக 
இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். 
தாங்கள் இறை உவப்புக்காகக் 
கல்வி அறிவைப் பெற்றிருந்தால் 
இந்த உலகத்திலிருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள். 
மாறாக, வெறும் உலகியலுக்காகத் 
தாங்கள் கல்வி அறிவைப் பெற்றிருந்தால் 
அல்லாஹ்விடமிருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள்.


இதுதான் உண்மையான மெய்யறிவு என்று 
அறிஞர் உணர்ந்து கொண்டார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக