புதன், 19 பிப்ரவரி, 2014



மறுமை எப்போது வரும்?

'
இறந்தபின் வாழ்வுண்டு' என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துக்கூறும் பணியில் தீவிரமாக இருந்த நபி (ஸல்) அவர்களிடம் அந்த மக்கள், 'மறுமை நாள் வரும் என்கிறீர்களே! அது எப்போது வரும்? என்றும் கேள்வி கேட்கத் துவங்கினர்.

(
நபியோ) மறுமையின் நிகழ்வுநேரம் பற்றி உம்மிடம் அவர்கள் 'அது எப்போது வரும்?' என்று கேட்கிறார்கள். அந்த நேரம் பற்றிக் குறிப்பிட உமக்கு என்ன இருக்கிறது? உமது இறைவனிடமே அதன் முடிவு உள்ளது. நிச்சயமாக நீர், அதைப் பயப்படுவோருக்கு நீர் எச்சரிக்கை செய்பவர்தான்' (அல்குர்ஆன் 79:42-45).

மறுமை நாள் எப்போது ஏற்படும் என்ற ரகசியத்தை அல்லாஹ் தன் கையில் வைத்திருப்பதாக கூறுகின்றான். 'அது வரும்' என்பதைக் கூறும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்களே தவிர, அந்த நாள் வரும் காலம் பற்றி அவர்கள் கூறவில்லை.

 காரணம் என்ன?

மறுமை நிச்சயம் வரும் என்ற நிலையில், அது வருகின்ற நாளை தெளிவாக அறிவித்திருக்கலாமே! அறிவிக்கத் தயங்குவது ஏன்? என்ற சந்தேகம் வரலாம்.

நிச்சயமாக அந்த (மறுமையின் நிகழ்வு) நேரம் வரக்கூடியதாக உள்ளது. உயிரினம் அனைத்தும், தான் செய்ததற்கு ஏற்ப கூலி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அந்த நாளை நான் ரகசியமாக வைத்துள்ளேன் (அல்குர்ஆன் 20:15).

மறுமை நாள் வரும் எனக் கூறும் இறைவன், 'அது எப்பொது வரும்?' என்பதை மட்டும் ஏன் மறைத்து வைத்துள்ளான் என்பதற்கு சரியான காரணத்தை இந்த வசனத்தில் தெளிவு படுத்துகிறான்.

ஆம்! இந்த நாளில் இன்ன நேரத்தில் அது வரும் என்பது முன்கூட்டியே அறிவிப்பு செய்யப்பட்டிருந்தால், மனிதர்களின் வாழ்வில் பெரும் குழப்பமே எஞ்சியிருக்கும். இன்ன நேரத்தில் மரணம் வரும், மறுமை வரும் என்ற செய்திகளை அல்லாஹ் மறைத்து வைத்திருப்பதால் தான் உலகம் ஓரளவு அமைதியாக உள்ளது.

மறுமை வருமா? என்ற சந்தேகம் ஒரு புறம், எப்போதுவரும்? என்ற சந்தேகம் ஒரு புறம் என, அவர்களின் நிலை குழப்பதில் இருந்தது. அது வெகு சீக்கிரம் எரும் என அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் அறிவிக்கின்றனர்.

நிகழப்போகும் (மறுமையின்) வேதனை பற்றி கேள்வி கேட்பவன் கேட்கிறான். இறை மறுப்பாளர்களுக்கு (அது ஏற்படும் போது) அதைத் தடுப்பவர் எவரும் இருக்கமாட்டார். உயர் வழிகளைப் பெற்ற அல்லாஹ்வின் மூலம் (அது ஏற்படும்). ஒரு நாள் வானவர்களும் (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் அவனிடம் உயர்வார்கள். அந்நாளின் அளவு, ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குச் சமமாக இருக்கும். எனவே நீர் அழகிய பொறுமையுடன் இருப்பீராக! அவர்களோ அதை (மறுமையை) வெகு தூரமாகக் காண்கிறார்கள். நாமோ அதைச் சமீபமாகக் காண்கிறோம் (அல்குர்ஆன் 70:1-7).

'. . .
இரண்டு நபர்கள் (விற்பனைகுரிய ) துணிகளை விரித்து (ப்பார்த்து)க் கொண்டிருப்பார்கள். அதனை அவர்கள் விற்பனை செய்திருக்க மாட்டார்கள். சுருட்டிக் கூட வைத்திருக்கவும் மாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். மேலும் ஒரு மனிதர் மடி கனத்த தமது ஒட்டகத்தி(ல் பால் கறந்து அப்போதுதா)ன் பாலுடன் (வீடு) திரும்பி இருப்பார். அதற்குள் மறுமை ஏற்பட்டு விடும். ஒருவர் தமது நீர் தொட்டியை (அப்போதுதான்) கல் வைத்து பூசி இருப்பார். இன்னும் அதில் நீர்கூட இறைத்திருக்கமாட்டார். அதற்குள் மறுமை வந்து விடும். உங்களில் ஒருவர் தமது உணவை (அப்போதுதான்) வாயருகில் கொண்டு சென்றிருப்பார். அதைச் சாப்பிட்டிருக்க மாட்டார், அதற்குள் மறுமை வந்துவிடும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.. அறிவிப்பவர்:அபூஹீரைரா(ரலி), நூல்: (புஹாரி 6506).

மறுமை நாள் வெகு தூரத்தில் இல்லை. சமீபத்தில் உள்ளது. அது நிகழ்வும் கூட சில வினாடித் துளிகளில் நடந்து முடிந்து விடும் என்பதை இந்த வசனம்-ஹதீஸ் மூலம் அறியலாம்.

எனவே மறுமை வரும் முன் நன்மை செய்வேம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக