புதன், 21 ஜனவரி, 2026

யாரிடம் எதை கொடுக்க வேண்டும்.

 பொறுப்பு

=========

ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும்.


ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அப்போ தோட்டக்காரனுக்கு ஒரு ஐடியா தோன்றியது. தான் ஊருக்குப் போகும் காலத்தில் 


குரங்குகளை தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லலாமே என்று நினைத்தான்.


குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்சனை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.


''அது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.


வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.


''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.


நீதி: புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்


மக்கள் உங்களைப் பற்றிப் பேசுவதை

 ஹஸன் பஸரி (ரஹ்) அவர்களிடம் ஒரு நாள் கேட்கப்பட்டது:* 


மக்கள் உங்களைப் பற்றிப் பேசுவதை நீங்கள் ஏன் பொருட்படுத்துவதில்லை? 


அதற்கு ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்:


1.நான் பிறக்கும்போது தனியாகத்தான் பிறந்தேன்;


2.நான் இறக்கும்போது தனியாகத்தான் இறக்க வேண்டும்; 


3.கப்ரில் வைக்கப் படும்போது தனியாகத்தான் வைக்கப் படுவேன்; 


4.அல்லாஹ்வின் முன்னால் கேள்வி கணக்கு கேட்கப்படும்போது தனியாகத் தான் கேட்கப் படுவேன்; 


5.நான் நரகத்திற்குப் போனால் தனியாகத்தான் போக வேண்டும்; 


6.சொர்க்கத்திற்குப் போனால் தனியாகத்தான் போக வேண்டும். 


இப்படி இருக்க மக்களோடு எனக்கு என்ன இருக்கிறது?


ஹழ்ரத் ஹஸன் பஸரி (ரஹ்).

செவ்வாய், 20 ஜனவரி, 2026

நம்பிக்கை அவன் மீதே

 முழு நம்பிக்கை வைப்போம்


எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது !! நாமெல்லாம் அவனின் சாதாரண படைப்புகள் தான் !!


இமாம் இப்னு சீரீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு மஸ்ஜிதில் நுழைகிறார் .


அங்கு ஒரு பத்து வயது கூட நிரம்பி இருக்காத ஒரு சிறுவன் தொழுது கொண்டிருந்தான் எப்படிஎன்றால் மிகவும் பேணுதலுடன் , அல்லாஹ்வின்


அச்சம் மேலோங்கியவனாக பணிவோடு தொழுகையை நிறைவேற்றுவதை கண்ட இமாம் இப்னு சீரீன் (ரஹ்) அவனை அழைத்து “ ஒ சிறுவனே நீ


யாருடைய மகன் ?” என்று கேட்க “நான் ஒரு அநாதை சிறுவன் எனக்கு தந்தையும் இல்லை தாயும் இல்லை” என்று அந்த சிறுவன் கூறினான் .


இமாம் அவர்களோ ஆர்வமுடன் “நான் உன்னை தத்தெடுத்து கொள்ளவா ?


உனக்கு ஒரு தந்தையாக இருந்து உன்னுடைய தேவைகளை நிறைவேற்றுவேன் என்னோடு வர சம்மதமா ? என்றார்கள் .


அந்த பத்து வயது கூட நிரம்பாத அச்சிறுவனோ “நான் உங்களோடு வர ஐந்து நிபந்தனைகள் உள்ளது அதற்க்கு சரி என்றால் நான் உங்களோடு வருகிறேன் “ என்று கூறினான் .


இமாம் ஆச்சரியமுடன் “ என்ன அந்த ஐந்து நிபந்தனைகள் என்று கேட்க

அச்சிறுவன் பட்டியலிடுகிறான் “முதல் நிபந்தனை –எனக்கு பசிக்கும்போது

உணவளிப்பீர்களா ? “என்று கேட்க இமாம் “உனக்கு போதும் என்று சொல்லுமளவிற்கு உணவளிப்பேன் என்றார் .


மேலும் சிறுவனின் இரண்டாம் நிபந்தனை “எனக்கு தாகம் எடுத்தால் தாகம் தனிப்பீர்களா ?


இமாம் “ உனக்கு போதும் என்று சொல்லும் அளவிற்கு உன் தாகத்தை தணிப்பேன் “என்றார்கள்


மேலும் சிறுவனின் மூன்றாவது நிபந்தனை எனக்கு ஆடையில்லை என்றால் ஆடை அணிவிபீர்களா ? “


இமாம் : உனக்கு அழகிய ஆடைகளை அணிவிப்பேன் “ என்றார்கள்


சிறுவனின் நான்காவது நிபந்தனை எனக்கு நோய் ஏற்பட்டால் நிவாரணம் அளிப்பீர்களா ?


இமாம் : நோய் ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பேன் . நிவாரணம் அளிப்பது அல்லாஹ் ஒருவனே “


சிறுவனின் ஐந்தாவது நிபந்தனை “ நான் இறந்தால் நீங்கள் எனக்கு உயிர் கொடுப்பீர்களா ?


இமாம் : பிறப்பும் இறப்பும் அல்லாஹ்வின் கரத்தில் அல்லவா உள்ளது “ என்றார்கள்


இமாமை மிக ஆழ்ந்து யோசிக்கவைத்தான் சிறுவன்


மேலும் அவன் இமாமை பார்த்து “ ஓ மனிதரே !! நீங்கள்


எனக்கு நோய்வாய் பட்டால் அதற்க்கு நிவாரணம் அளிக்க முடியாது !


நான் இறந்தால் என்னை திரும்பவும் உயிர்பிக்க முடியாது ! எனவே என்னை


விட்டுவிடுங்கள் .!!என்றதும் இமாம் “உன்னை விட்டுவிட்டால் உன்னை கவனிப்பவர் யார் ?


சிறுவனோ “ என்னை விட்டுவிடுங்கள் எவன் என்னை படைத்தானோ ,


எவன் எனக்கு நேர்வழி கொடுத்தானோ , எவன் எனக்கு உண்ணவும் , தாகம் தணிக்கவும் வைக்கிறானோ , யார் நான் நோய்வாய் பட்டால் நிவாரணம் அளிக்கிறானோ , யார் நான் இறந்தால் உயிர் கொடுபானோ அவனே


எனக்கு வாழ்வளிப்பான் ! அவனே என்னை கவனித்துகொள்வான் !!!


இதைகேட்ட இமாம் 

لا اله الا الله توكت علي الله كفى بالله وسبحانه


வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை , அவனையே முழுமையாக நம்பிக்கை வையுங்கள் அவன் ஒருவனே நமக்கு போதுமானவன் ,மேலும் பரிசுத்தமானவன் .”என்றார்கள் .


இந்த சிறுவனின் நம்பிக்கையை போல் நாம் அனைவரும் அல்லாஹ்வின் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைப்போம் !!!


8 விஷயம்

 



8 விஷயம் 


ஒரு நாள் ஷெய்கு ஷகீக் பல்கீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தன்னுடைய சீடர் ஹாதிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இடத்தில் நீங்கள் எவ்வளவு நாட்களாக என்னிடத்தில் தங்கி இருக்கிறீர்கள் எனக்கேட்டார்கள்

32 ஆண்டுகளாக தங்களுடன் இருக்கிறேன் என்று ஹாதம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்.

இவ்வளவுநீண்ட காலத்திலே என்னிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று ஷேக் அவர்கள் கேட்டார்கள்.

எட்டு விஷயங்கள் மட்டுமே நான் கற்றுக் கொண்டேன் என்று ஹாதிம்  ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொன்னார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் இத்தனை நீண்ட காலம் என்னிடம் தங்கி எட்டு விஷயத்தைத்தான் கற்றுக் கொண்டீர்களா என்னுடைய காலம் வீணாகிவிட்டதே என்று வருத்தப்பட்டார்கள்.

கண்ணியமிக்க ஷேக் அவர்களே இதை விட கூடுதலாக கற்றுக் கொள்ள முடியவில்லை அதே நேரத்தில் பொய்யையும் என்னால் சொல்ல முடியாது என்றார் ஹாத்தம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி 

நல்லது அந்த எட்டு விஷயம் என்னவென்று கூறுங்கள் என்றார்கள் ஷெய்கு அவர்கள்

நான் மக்களை பார்க்கிறேன் அவர்கள் கப்ருக்கு செல்கின்ற வரை அவர்களுக்கு பிரியமானது அவர்களுடன் இருக்கிறது.

எப்போது மனிதன் கபுருக்கு சென்று விடுவானோ தன்னுடைய பிரியமான பொருளை விட்டு விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே எனக்கு பிரியமான பொருளாக நல்ல அமல்களை ஆக்கிக் கொண்டேன் 

ஏனென்றால் நான் கபுருக்கு சென்றாலும் எனக்கு பிரியமான நல்ல அமல் என்னுடன் இருக்கும் என்பதற்காக. இது முதல் விஷயம்.


மக்களைப் பார்த்தேன் யாரிடமாவது விலை உயர்ந்த பொருள் இருந்தால் அதை ரொம்பவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்

பின்பு அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்கும் இந்த ஆயத்து என்னுடைய ஞாபகத்திற்கு வந்தது

உங்களிடத்தில் இருக்கின்ற ஒன்று அது செலவாகிவிடும் எது அல்லாஹ்விடம் இருக்கிறதோ அது நிரந்தரமாக இருக்கும் என்ற வசனம் கண்ணில்பட்டது. (அல்குர்ஆன் அத்தியாயம் நஹ்ல் ஆயத் 96)

எனவே என்னுடைய கையில்  எந்த பொருள் எல்லாம் விலை உயர்ந்ததாக இருக்குமோ மதிப்பு மிக்கதாக இருக்குமோ நான் அல்லாஹ்விடத்தில் அதை திருப்பி அவனிடத்தில் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று தான தர்மங்கள் செய்து விடுகிறேன் அது வீணாகாமல் இருப்பதற்காக. இது இரண்டாவது விஷயம்.


யார் தமது இறைவனுடைய சன்னிதானத்தில் நிற்பதை பற்றி அஞ்சி  மனோ இச்சையை விட்டும் தன்னை விளக்கிக் கொண்டாரோ சொர்க்கமே அவரது தங்குமிடம். (அல்குர்ஆன் அத்தியாயம் : 79 வசனம் : 40, 41)


என்ற வசனத்தை படித்தவுடன் என்னுடைய மனோ இச்சைக்கு கடிவாளம் இட்டு விட்டேன் மனோ இச்சைகளை  பின் தொடர்வதில் இருந்து என்னை பாதுகாத்துக் கொண்டேன் என்னுடைய மனம் அல்லாஹ்வுக்கு கீழ் பணிவதிலே உறுதி ஆக்கிக் கொண்டேன். இது மூன்றாவது விஷயம்.


மக்கள் ஒவ்வொருவரும் உலகிலே பொருளாதாரம் குடும்ப பாரம்பரியம் பட்டம் பதவிகளை பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்கிறார்கள்

இவற்றையெல்லாம் கூர்ந்து கவனிக்கும் போது ஒரு கட்டத்தில் ஒன்றுமே இல்லாததாக ஆகிவிடுகிறது


நான் இந்நேரத்தில் அல்லாஹ்வுடைய இந்த வசனத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டேன் 


உண்மையில் அல்லாஹ் இடத்தில் உங்களில் மிக சங்கையானவர்கள் மதிப்பு மிக்கவர்கள் உங்களில் யார் ரொம்பவும் பேணுதல் மிக்கவர்களாக இருக்கின்றார்களோ தக்குவா உடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள்தான்.( அல்குர்ஆன் அத்தியாயம் : 49. வசனம் : 13)


என்ற வசனம் என்னுடைய கண்ணில் பட்ட போது நான் தக்வாவை தேர்ந்தெடுத்துக் கொண்டேன் அல்லாஹ் இடத்தில் கண்ணியத்தை பெறுவதற்காக. இது நான்காவது விஷயம்.


மக்கள் தங்களுக்கு மத்தியில் ஒருவரை ஒருவர் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை கண்டேன் ஒருவர் மற்றவரின் மீது பொறாமை பட்டுக் கொண்டிருக்கின்றனர் இந்நிலையில் குர்ஆனுடைய ஆயத் என்னுடைய கண்ணில் பட்டது


உங்களது இறைவனின் அருட்கொடைகளை அவர்கள் தான் பங்கீடுகிறார்களா ?


இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் வாழ்க்கை வசதிகளை நாமே பங்கிடுகிறோம். (அல்குர்ஆன்வசனம் : 32 அத்தியாயம் : 43)


எனவே நான் மக்களிடம் உள்ள பொருள் பட்டம் பதவிகள் மீது பொறாமை படுவதை விட்டுவிட்டு மக்களில் இருந்து ஒதுங்கி பொருளாதார பங்கீடு அல்லாஹ்வுடைய கையில் மட்டுமே இருக்கிறது என்பதை புரிந்து அல்லாஹ் நாடியவர்களுக்கு நாடியதை கொடுத்திருக்கிறான் என்பதை பொருந்திக் கொண்டு

மக்கள் மீது பொறாமை கொள்வதை விட்டும் நீங்கி கொண்டேன். இது ஐந்தாவது விஷயம்.


மக்கள் தங்களுக்கு மத்தியில் சண்டையிட்டுக் கொள்வது அடித்துக் கொள்வது திட்டிக் கொள்வது ரத்தத்தை ஓட்டுவதை பார்த்தேன் இந்நிலையில் குர்ஆனுடைய ஒரு ஆயத் என்னுடைய கவனத்தில் வந்தது.


சைத்தான் உங்களுக்கு எதிரியாவான் அவனை நீங்கள் எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் அத்தியாயம் : 35 வசனம் : 6)


இந்த வசனத்தின் அடிப்படையில் சைத்தானை மட்டுமே என்னுடைய எதிரியாக  ஆக்கிக் கொண்டேன் அவனிலிருந்து நான் தப்பித்துக் கொண்டால் போதும் என்ற முயற்சியில் முழுமையாக ஈடுபட்டேன். இது ஆறாவது விஷயம்.


உணவுப் பொருட்களுக்காக தன்னை இழிவு படுத்திக் கொண்டு ஹராம் ஹலால் பாராமல் சம்பாதிப்பில் ஈடுபட்டு விடுவதை மக்களிடத்தில் பார்த்தபோது குர்ஆனுடைய இந்த வசனம் என்னுடைய கவனத்தில் வந்தது


பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். (அல்குர்ஆன் அத்தியாயம் :11 வசனம் : 6)


இதற்குப் பின்பு அல்லாஹ்வுடைய பொறுப்பில் எந்த விஷயம் இருக்கிறதோ அதற்கான ஏன் கடினமாக உழைக்க வேண்டும் என்று சக்திக்கு உட்பட்டு முயற்சிகள் செய்து அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு விட்டேன். இது ஏழாவது விஷயம்.


மக்களை பார்த்தேன் அவரவர்களும் ஏதேனும் ஒரு வஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் 

சிலர் தங்களுடைய நிலங்களை நம்பி இருக்கிறார்கள் 

சிலர் தங்களின் வணிகங்களை நம்பி இருக்கிறார்கள் 

சிலர் தங்களுடைய தொழிலின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்

சிலர் தங்களுடைய உடல் சக்தியின் மீதும்  

சிலர் தங்களுடைய சிந்தனையின் மீதும் கல்வி ஆற்றலின் மீதும் நம்பிக்கை வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்


 நான் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி குர்ஆனை பார்த்த போது அல்லாஹ் கூறுகிறான் :- யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை சாட்டி விட்டார்களோ அல்லாஹுவே அவருக்கு போதுமானவனாக இருக்கிறான் என்கிற இந்த ஆயத் என்னுடைய கண்ணில் பட்டது. (அல்குர்ஆன் அத்தியாயம் தலாக் , வசனம் : 3)


இந்த ஆயத்தின் அடிப்படையில் நான் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து அல்லாஹ்வே போதுமானவன் என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். இது எட்டாவது விஷயம்.


இந்த எட்டு விஷயங்களையும் ஷைக்கு பல்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தன்னுடைய சீடரிடம் செவியுற்ற போது என்னுடைய அருமை சீடரே என்னுடைய அருமை மாணவரே அல்லாஹ் உங்களுக்கு அதன் படி செயல்பட நல்ல வாய்ப்பை தருவானாக. ஆமீன் 


நான் குர்ஆனுடைய வசனங்களை எல்லாம் ஆராய்ந்த போது அதனுடைய சாராம்சங்கள் நீங்கள் சொன்ன அத்தனையின் அடிப்படையின் வேராக இருப்பதை பெற்றுக் கொண்டேன் என்று சொல்லி பாராட்டினார்கள்.

நாமும் செயல்பட்டு உன்னதநிலையை அடைய முயற்சி செய்வோமாக

ஆமீன்.