புனித மிஃராஜ் பயணம்
سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ
عن أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ -رَضِيَ اللهُ عَنْهُمَا-، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يقول: لَمَّا كَذَّبَتْنِي قُرَيْشٌ, قُمْتُ فِي الحِجْرِ, فَجَلَّى اللَّهُ لِي بَيْتَ الْمَقْدِسِ, فَطَفِقْتُ أُخْبِرُهُمْ عَنْ آيَاتِهِ وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ. بخاري
அல்லாஹ் நபிமார்களுக்கு பல நேரங்களில் அவர்கள் நபி என்பதை நிரூபிப்பதற்கு அல்லாஹ் கொடுப்பது முஃஜிஸா அற்புதம் ஆகும்.
முஃஜிஸா அற்புதங்கள் என்பது கண்கட்டி வித்தைகள் அல்ல நிஜமாக நடக்கும்.
அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எண்ணற்ற அற்புதங்களை கொடுத்தான்.
அதில் மிக முக்கியமான ஒன்று தான் மிஃராஜ்.
பிரபலமான திருக்குர்ஆனின் விரிவுரையாளர் பேரறிஞர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( أَنَّ الْإِسْرَاءَ كَانَ لَيْلَةَ السَّابِعِ وَالْعِشْرِينَ مِنْ رَجَبٍ. وَاللَّهُ أَعْلَمُ ) (மிஃராஜ் எனும்) விண்ணுலப் பயணம் மேற்கொண்டது ரஜப் மாதம் 27 வது நாள் இரவாகும். அல்லாஹ்வே (இதைப் பற்றி முழுமையாக) அறிந்தவன். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா
இரண்டு நிகழ்வுகள் ஒன்று
இஸ்ரா
மிஃராஜ்
இஸ்ரா என்றால் மக்காவில் இருந்து பைத்துல் முகத்தஸ் வரை சென்ற பயணம் சுமார் 1500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அல்லாஹ் குர்ஆனில் அதைத்தான் கூறுகின்றான்.
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 17:1)
தொழுகைக்கு நேரம் ஆகிவிட்டது பாங்கு சொல்லி விட்ட பிறகு இமாம் அல்லது வேறு யாராவது கூறுகிறார்கள் நீங்கள் தொழுகை வில்லையா ? என்று கேட்கும் போது இப்போது தான்நான் கஃபத்துல்லாவிற்கு சென்று தொழுது விட்டு வந்தேன் என்று சொன்னால் எல்லோரும் அவர்களை கேலியாக நாம் பார்ப்போம்.
இவ்வளவு விஞ்ஞானம் உச்சத்திற்கு சென்ற பிறகும் நான் அப்படித்தான் நினைப்போம். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வளவு சீக்கிரம் அப்படி தான் சென்று வந்தார்கள்.
மிக குறுகிய காலத்தில் மிக அதிகமான இடங்களுக்கு சென்று வந்தார்கள் பல விஷயங்களை கண்டார்கள்.சொர்க்கம் நரகம்….ஏழு வானம்
சித்ரதுல் முன்தஹா கடந்து அல்லாஹ்வை சந்தித்து வந்தார்கள்.
கேள்வி ஒன்று பதில் பலதாக இருக்க வேண்டும்
மன்னர் ஹாரூன் ரஷீத் சபையில் பெண்கள் இடம் ஒரே கேள்வி பதில் வேறு இருக்கனும் ஒரு நாள் தொழுகை எத்தனை ரக்அத்?
- ஒரு பெண் கூறினார்கள்:- 17 தினம் தொழுகை ரக்அத்
- ஒரு பெண் கூறினார்கள்:-15 வெள்ளி கிழமை ரக்அத்
- ஒரு பெண் கூறினார்கள்:-11 பயண தொழுகை ரக்அத்
இந்த மூன்று பெண்களுக்கும் மன்னர் ஹாரூன் ரஷீத் பாதுஷா பரிசு கொடுத்தார்கள்.
இன்றைய விஞ்ஞான உச்சியில்
வேகமாக செல்லக்கூடிய ஒன்று எது ? பஸ் ரயில் கார் விமானம் ராக்கெட் ஆ…?
எது மிக வேகமாக செல்லக்கூடியது ? வேகமாக செல்லக்கூடியது அது ஒளி தான் ஒரு செகண்டுக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகம் செல்லும்.
உதாரணமாக:- சூரியனில் இருந்து பூமிக்கு பயணிக்க சராசரியாக 8 நிமிடம் 20 வினாடிகள்.சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி தூரம் = 150,000,000 கிலோமீட்டர்கள் சூரியன் ஒளியின் வேகத்தில் பயணிப்பதால் ,ஒளியின் வேகம் = 300,000 கிலோமீட்டர்/வினாடி
ஒளியை விட வேகமாக
அந்த ஒளியை படைத்த அல்லாஹ் நினைத்தால் அதைவிட வேகமாக செல்ல வைக்க முடியும் அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மக்காவில் இருந்து பைத்துல் முகத்தஸ் அழைத்துச் சென்ற அந்த வாகனம் புராக் அது ஒளியினால் படைக்கப்பட்டது.
புராக் என்று சொன்னால் பர்க் என்பதில் இருந்து வந்தது பர்க் என்றால் மின்னல் என்று பொருள் ஒளியில் இருந்து தான் அது உருவாக்கப்பட்டது.
மின்னல் வெட்டுவதைப் போல் அது அவ்வளவு வேகமாக செல்லும்.
மிஃராஜ் எப்போது நடந்தது?
மிஃராஜ் நடந்த நேரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வயது 51 ஆகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிபி 570 இல் பிறந்தார்கள். மிராஜ் நடந்தது கிபி 621 வருடம் ரஜப் பிறை 27 ல் மிஃராஜ் நடந்தது.
மிஃராஜ் நடந்த கிழமை எது ?
வரலாற்றில் வாரத்தில் ஏழு நாளில் வெள்ளிக்கிழமை போல் சிறந்த நாளும் உண்டு. வெள்ளி கிழமை அன்று ஜும்ஆ உடைய தினம் அதனால் அந்த நாளுக்கு சிறப்பு ஆகும்.
அதே போல் திங்கட்கிழமைக்கும் சிறப்பு உண்டு ஏன் தெரியுமா?
- அன்றுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்தார்கள்.
- திங்கள்கிழமை தான் நுபுவ்வத் அன்று தான் கொடுக்கப்பட்டது.
- அன்று தான் ஹிஜ்ரத் புறப்பட்டார்கள்.
- அன்றுதான் ஹிஜ்ரத் முடித்து மதினா சென்றார்கள்.
- அன்றுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வஃபாத் ஆனார்கள்.
- அன்றுதான் மிஃராஜ் பயணம் சென்றார்கள்.
- திங்கட்கிழமைக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தான் அந்த தினத்திற்கு சிறப்பு வந்தது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முக்கியமான இந்த மூன்று நிலையிலும் நபிக்கு உறுதுணையாக இருந்தது தாய்மார்கள் தான்.
1)நபித்துவம் கொடுக்கப்பட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது என்னை போர்த்துங்கள் என்று சொன்னார்கள் அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அவர்கள் கூட இருந்தது கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்.
2)மிஃராஜ் சென்றது ஹழ்ரத் உம்மு ஹானி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டில் இருந்து சென்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சிறிய தந்தை மகள் சகோதரி முறை அவர்கள் .
3)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வஃபாத் ஆகும்போது ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் இடம் மடியில் வஃபாத் ஆனார்கள்.
ஷக்குஸ் ஸத்ர்
ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வருகை தந்தார்கள் வந்து நபியை அழைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நெஞ்சு பிளந்து அறுவை சிகிச்சை நடைபெற்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-
நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அதன் வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கினார்கள். என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் மற்றும் ஞானத்தால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டி விட்டு அதை மூடி விட்டார்கள்” நூல்:புகாரி
இந்நிகழ்வு மூன்று தடவை இது நடந்தது
1)சிறு பிள்ளைகளாக இருக்கும் போது நடந்தது.
2) நுபுவ்வத் கொடுக்கும் போது நடந்தது.
3)மிஃராஜ் செல்லும் போது நடந்தது.
ஆக மூன்று தடவை ஷக்குஸ் ஸத்ர் நடந்தது
இந்த ஷக்குஸ்ஸத்ர் ஏன்?
நாம் இப்போது விஞ்ஞானத்தில் பார்த்திருப்போம் ராக்கெட்டில் செல்லும் போது விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளக் கூடியவர்கள் நிலவிற்கு செல்லக்கூடியவர்கள் இன்ன பிற கோலுக்கு செல்லக் கூடியவர்கள் வேறு வகையான ஆடை அணிந்து செல்வது வழக்கம் அங்கு உஷ்ணம் சூடு ஈர்ப்பு சக்திகள் எல்லாம் கூடதல் குறைவாக இருக்கும் எனவே விண்வெளி வீரர்கள் அதை தாங்கும் சக்தி வர வேண்டும் என்பதற்காக வேறு விதமான ஆடைகள் அணிவார்கள் அது போல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பைத்துல் முகத்தஸ் அங்கிருந்து மிஃராஜ் பயணம் செல்லும் போது அவர்களுக்கு அது செய்யப்பட்டது.
மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸ் வந்தது இஸ்ரா. பைத்துல் முகத்தஸில் இருந்து சித்றத்துல் முன்தஹா கடந்து அல்லாஹ்வை சந்தித்து வந்தது மிஃராஜ்.
அல்லாஹ் ஏன் திடீரென்று நபியை அழைத்துச் சென்றான்?
அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மனைவி கதீஜா ரலியல்லாஹு அன்ஹா ஒரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருப்பார்கள் அது போல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வெற்றிக்குப் பின் மிகவும் உறுதுணையாக இருந்தது கதீஜா ரலியல்லாஹு அன்ஹா
அவர்கள் அந்த வருடத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
அதனால் தான் கடைசி காலம் வரை அவர்களை நினைத்துக் கொண்டே இருந்தார்கள் அவர்களின் பெயரில் ஆடு அறுத்து கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் தோழிகளுக்கு கொடுப்பார்கள் பல தடவை அவர்களைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள் சில நேரங்களில் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு கோபம் வரும் அவ்வளவு பிரியம் அவர்கள் மீது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வைத்திருந்தார்கள்.
இன்னொருவர் உறுதுணையாக இருந்தவர் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களும் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
அல்லாஹ்வின் நோக்கம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும்.
மக்காவில் இருந்து பைத்துல் முகத்தஸ் செல்லும் வழியில் நிறைய நிகழ்ச்சிகளில் நடந்தது :-
🌹மிஃராஜ் பயணத்தில் பைத்துல் முகத்தஸை நோக்கிச் செல்லும் வழியில் அருமையான வாசனையை நபி ஸல் அவர்கள் உணர்ந்து இது என்ன வாசனை என்று ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்க, இதுதான் ஃபிர்அவ்னின் பெண் பிள்ளைகளுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த மாஷிதா மற்றும் அவரது சிறு குழந்தைகளின் கப்ருகளாகும். இந்தப் பெண்ணும் கணவரும் குழந்தைகளும் ஆசியா அம்மையாருக்கு முன்பே இஸ்லாத்தை ஏற்றனர். ஒருநாள் வழக்கம்போல் ஃபிர்அவ்னின் மகள் ஒருத்திக்கு இவர் தலைவாரிக் கொண்டிருந்தார். (ஆசியா அம்மையார் மூலமாக பிறந்த பிள்ளை அல்ல. ஆசியா அம்மையாரை ஃபிர்அவ்னால் நெருங்கவே முடியவில்லை. அவனின் நுத்ஃபாவை அந்த அம்மையாருக்கு அல்லாஹ் ஹராமாக்கி விட்டான். விபரம் பின்பு கூறப்படும்.) அவ்வாறு தலைவாரியபோது சீப்பு கீழே விழுந்து விட, தன்னை மறந்து இதுநாள் வரை ஈமானை மறைத்து வைத்திருந்த சிந்தனை இன்றி பிஸ்மில்லாஹ் என்று சொல்லி அந்த சீப்பை எடுக்க, அது கேட்ட ஃபிர்அவ்னின் மகள் யார் அந்த அல்லாஹ் என் தந்தை தானே என்றாள். இல்லை. உண்மையான இறைவன். உன் தந்தைக்கும் நமக்கும் எல்லோருக்கும் அவன் தான் ரப்பு என்று உண்மையைக் கூறி விட, அவள் உடனே சென்று தன் தந்தையிடம் போட்டுக் கொடுத்து விட்டாள். அவன் உடனடியாக மாஷிதா அம்மையாரை அழைத்து வரச் சொன்னான். என்னையன்றி வேறு கடவுள் உனக்கு உண்டா என்று கேட்க, அந்த அம்மையாரின் பதில் உறுதியாக இருந்த து. ஆத்திரம் அடைந்த அவன் ஒரு ராட்சதச் சட்டியில் மாட்டின் தலை அளவுக்கு உள்ள ஈயத்தை உருக்கி அந்த அம்மையாரையும் அவரின் சின்னஞ்சிறு பிள்ளைகளையும் அதில் போட்டான். அதற்கு முன்பு அந்த அம்மையாரிடம் உனது கடைசி ஆசை என்ன என்று கேட்க, எனது உடலும் என் பிள்ளைகளின் உடலும் கருகிய பின் எங்கள் அனைவரின் எலும்புக்கூடுகளை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு ஃபிர்அவ்ன் என்னுடைய விசுவாசமான வேலைக்காரி என்பதால் அவ்வாறே செய்கிறேன் என்றான். அதற்குப் பின் ஒவ்வொருவராக கொதிக்கும் அந்தச் சட்டியில் தூக்கிப் போடப்பட்டது. முதலில் மூத்த குழந்தை பிறகு அடுத்த குழந்தை என அந்த அம்மையாரின் கண்ணெதிரே போடப்பட்டது. இறுதியாக அந்தப் பெண்ணையும் பிறந்து சில நாட்களே ஆன அவருடைய ஆண் குழந்தையையும் ஒன்றாக கொதிக்கும் அந்தச் சட்டியில் போடும்போது அந்த அம்மையார் தன் பிஞ்சுக் குழந்தையை நினைத்து தயங்கியபோது அந்தக்குழந்தை வாய் திறந்து அம்மா.... நீங்கள் சத்தியத்தின் மீது இருக்கிறீர்கள். கலங்காதீர்கள். பின் வாங்காதீர்கள். என்று பேசியது. இறுதியில் அவ்விருவரும் போடப்பட்ட பின் உடல் கருகி இறந்தனர். நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்
அல்லாஹ் ஏன் பைத்துல் முகத்தஸ் அழைத்து அங்கிருந்து
மிஃராஜுக்கு கூட்டிட்டு போனான்.?
1)பைத்துல் முகத்தஸ் இருக்கும் இடம் மஹ்ஷர் உடைய இடம்.
நாளை மரணித்தவர்கள் சூர் ஊதப்படும் இடம். நாளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினர்கள் எழுப்பப்படுவோம் நபியின் உம்மத்திற்கு வேதனைகள் லேசாகப்பட வேண்டும் வேதனை விட்டு பாதுகாக்கப்பட வேண்டும் அதனால் நபியின் பாதம் அந்த இடத்தில் பட்டால் லேசாக்கப்படும் என்பதற்காக அங்கு அழைத்து சென்றான்.
2)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரு கிப்லாவை முன்னோக்கி தொழுதவர்கள் ஒன்று மதினாவிற்கு வந்து பைத்துல் முகத்தஸ் பார்த்து தொழுதார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆசை கஃபத்துல்லாஹ்வை பார்த்து தொழ வேண்டும் என்பது அதற்குப் பிறகு மாற்றப்பட்டு கஃபத்துல்லாவை நோக்கி தொழுதார்கள் கியாமத்து நாள் வரை கஃபத்துல்லாஹ் தான் கிப்லா அதையும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்குத்தான் அப்படி செய்தான்.
3)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போது வந்தார்களோ அவர்கள் தான் இறுதி நபி அவர்களுக்குப் பிறகு நபி இல்லை எப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்களோ அதற்கு முன் வாழ்ந்த நபிமார்களின் ஷரீஅத்து மாற்றம் செய்யப்பட்டது.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்போது வந்தாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தான் பின்பற்ற வேண்டும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்தாலும் அவர்களும் குர்ஆனை தான் பின்பற்ற வேண்டும் எல்லா நபிமார்களும் நபியை பின்பற்ற வேண்டும் ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல் ஈஸா அலைஹிஸ்ஸலாம் வரை எல்லோரும் முஹம்மது (ஸல்) நபியைத்தான் பின்பற்ற வேண்டும் எல்லா நபிமார்களுக்கும் நேரடியாக காட்ட வேண்டும் என்பதற்காக .
4)பல நபிமார்கள் அங்குதான் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஸியாரத் செய்து விட்டு அங்கே இருந்து அல்லாஹ்வை சந்திக்க செல்ல வேண்டும்.
விஞ்ஞானம் இன்று
இப்போது வானிற்கு ராக்கெட் அல்லது விமானம் அனுப்புவதாக இருந்தால் வானிற்கு என்று ஒரு வாசல் எல்லை உண்டு. கடலுக்கு என்று ஒரு எல்லை உண்டு. உதாரணமாக இலங்கைக்கு இந்தியா பக்கமான ஒரு நாடு சில ஊர்களில் இருந்து ரொம்ப நெருக்கம். உதாரணமாக இராமேஸ்வரத்திலிருந்து எல்கையிலிருந்து இலங்கையை பார்க்கும் போது அங்கு லைட் எரிவது தெரியும் அவ்வளவு பக்கம் சென்னையில் இருந்து தூரம் ஆனால் இலங்கைக்கு செல்வதாக இருந்தால் அங்கிருந்து பயணப்பட முடியாது சுற்றித்தான் செல்ல முடியும் வேண்டும் ஆனால் தூரம் குறைவான ஒரு பகுதி அந்த இடம். கப்பல் செல்லும் பகுதி 30 கிலோமீட்டர் இருந்தால் 10 கிலோமீட்டர் இந்தியா 10 கிலோமீட்டர் இலங்கை இடையில் உண்டான இடம்10 கிலோமீட்டர் இன்டர்நேஷனல் உண்டான ஒரு பகுதி எல்லா கப்பல்களும் செல்லவே முடியும் எல்லா இடங்களிலும் இது போல் தான் இருக்கும் இது கடலிலும் வானத்திலும் இதுபோல இருக்கும் அனுமதி வேண்டும் அந்த நாட்டிற்கு உண்டான எல்கைக்கு உள்ளாக வரும்போது அனுமதி வாங்க வேண்டும் விமானங்கள் குறிப்பிட்ட அளவிற்கு தான் பறக்க முடியும் அதற்கு மேலே பறக்க முடியாது 20 ஆயிரம் அடி முதல் 40ஆயிரம் அடி வரை 40 ஆயிரத்திற்கு மேலாக செல்வது சிரமம் ஜெட் விமானம் 45000 அடி உயரம் வரை போகும். அதற்கு மேலாக காற்று மண்டலம் அங்கே இருக்காது அதற்கு மேலே போய் விட்டால் அங்கே விமானங்கள் மாட்டிக் கொள்ளும்.
ஆனால் ராக்கெட் அதை தாண்டி செல்ல முடியும் அது வேறு நாட்டிற்கு உண்டான இடங்களுக்கு அதன் அனுமதி இன்றி அது சென்று வரமுடியும் அப்படி வரும்போது அந்த இடத்திற்கு சென்று விட்டு அங்கிருந்து நேர மேலே செல்லும். என்று கூறப்படுகிறது.
ராக்கெட் செல்வதாக இருந்தால் எந்த நாட்டில் இருந்து செல்வதாக இருந்தாலும் ஜெரூசலம்( பைத்துல் முகத்தஸ் ) வரை வந்து 40 ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி மேலே அங்கே வந்து அங்கிருந்து அப்படியே மேலே செல்லும் ஏனென்று சொன்னால் அங்கே ஏற்கனவே ஒரு பாதை இருக்கிறது அது அந்த பாதை வழியாக செல்வது மிக இலகுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் பாதையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிஃராஜிற்கு செல்லும் போது உருவாக்கினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லவ்ஹ் கலம் அரஷ் குர்ஸ் சொர்க்கம் நரகம் 7 வானம் பூமி எல்லாம் கடந்து அல்லாஹ்வை பார்த்தார்கள்.
ஏழு வானங்கள் :-
- முதல் வானம் புகையால் படைத்திருக்கிறான்.
- இரண்டாம் வானம் தங்கத்தால் படைத்திருக்கிறான்.
- மூன்றாம் வானம் தாமிரத்தால் படைத்திருக்கிறான்.
- நான்காம் வானம் வெள்ளியால் படைத்திருக்கிறான்.
- ஐந்தாம் மாதம் செம்பொன்னால் படைத்திருக்கிறான்.
- ஆறாம் வானம் மரகதத்தால் படைத்திருக்கிறான.
- ஏழாம் வானம் வெண்முத்தால் படைத்திருக்கிறான்.
எல்லா வானங்களுக்கும் ஒரு வாசல் உண்டு முதல் வாசல் வானத்தின் பொறுப்பாளர் மலக்கு இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் முதல் வானத்தின் பொறுப்பாளர் வந்து யார் கதவை தட்டுவது யார்? ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் உங்களுடன் இருப்பது யார்? முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
கதவை தட்டினால் யார் என்று சொல்ல வேண்டும் நான் தான் என்று சொல்லக்கூடாது இப்ராஹீம் மூஸா ஈஸா என்று கூற வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டில் இருக்கும் போது கதவை தட்டப்படுகிறது யார் ? என்று கேட்டார்கள் நான் தான் என்று சொன்னார்கள் நான் என்று சொன்னால் யார் என்று கேட்டார்கள் மார்க்கம் சொல்லித் தருகிறார்கள்.
சில நேரங்களில் ஜின்களும் கதவை தட்டும் மூரியாட்டம் செய்யும் சைத்தானியத்தான ஜின்கள் சில நேரங்களில் மனிதர்களின் தோற்றத்தில் அது வரும் உள்ளிருந்து யார் என்று கேட்டால் நம் குரலில் கூட அது நான் என்று சொல்லும் அதே நேரத்தில் பெயர் சொல்லக்கூடிய பலகீனம் அதற்கு உண்டு நம்முடைய பெயரை அதனால் சொல்ல முடியாது. நான் என்று சொல்லுமே தவிர யாருடைய தோற்றத்தில் வருகிறதோ அவர்களின் பெயர்களை அதுவால் சொல்ல முடியாது அதனால் சில நேரங்களில் சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பெயரை சொல்ல வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஏழு வானம் பயணம்
ஐந்து வகையான வாகனத்தில் சென்றார்கள்:-
1)மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸ் வரை புராக் வாகனத்தில் சென்றார்கள்.
அங்கு புராக்கை கட்டி விட்டு.
2)முதல் வானம் வரை. நூரானிய்யத்தான லிஃப்ட் மாதிரி ஒளிமையமான ஏனியில் சென்றார்கள்.
3)முதல் வானம் முதல் ஏழாம் வானம் வரை மலக்குமார்கள் தோளில் வைத்து தூக்கி சென்றார்கள் போட்டி போட்டு தூக்கி சென்றார்கள்.
மலக்குமார்களுக்கு இறக்கை உண்டு என்று அல்லாஹ் கூறுகிறான்:-
الْحَمْدُ لِلّٰهِ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ جَاعِلِ الْمَلٰٓٮِٕكَةِ رُسُلًا اُولِىْۤ اَجْنِحَةٍ مَّثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ يَزِيْدُ فِى الْخَـلْقِ مَا يَشَآءُ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.
4)ஏழாவது வானம் கடந்த பிறகு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள் என் முதுகில் நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
யார் இந்த ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் ?
எல்லா மலக்குகளுக்கும் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தலைவர்
எல்லா நபிமார்களுக்கும் வஹி கொண்டு வரும் மலக்.
வேதனை அதாப் இறக்க அவர்கள் ஒரு சப்தம் கொடுத்தால் போதும்.
اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍۙ
நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரீல் மூலம் வந்த) சொல்லாகும்.
ذِىْ قُوَّةٍ عِنْدَ ذِى الْعَرْشِ مَكِيْنٍۙ
(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
🌹கடும் சக்திவாய்ந்த தூதர் ஒவ்வொரு வாசலிலும் 70000 மலக்குமார்கள் வழியனுப்புவார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்டார்கள்…
பயங்கர சக்தி வாய்ந்த மலக் என்று அல்லாஹ் சொன்னான் உங்க சக்தி பற்றி தெரியனும் சொல்லுங்க.
நான் வஹி கொண்டு வரும் போது
வானில் ஓரத்தில் ஜின்கள் ஷைத்தான்கள் எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமாக என்னை தடுத்து நிறுத்தினாலும் என்னை தடுத்து நிறுத்த முடியாது. 600 இறக்கை மூலம் அவர்கள் அத்தனை பேரும் எரித்து தவிடு பொடியாக்கி விடுவேன் என்று கூறினார்கள்.
🌹இன்னொரு தடவை கேட்டார்கள் நீங்கள்
வஹி கொண்டு வரும் போது எந்த வேகத்தில் வருவீர்கள்?
ஒரு தடவை என்னுடைய தூதர் யூஸுப் அலை அவர்களை கிணற்றில் தொங்க விட்டு உள்ளே போட கயிற்றை வெட்டும் போது நான் சித்ரதுல் முன்தஹா வில் இருந்து வேகமாக வந்து தாங்கி பிடித்தேன். ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எல்லா நபிமார்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடைப்பட்ட ஒரு தூதுவர் ஆகும்..
5)சித்ரதுல் முன்தஹா என்ற இடம்
என்பது ஒரு இலந்தை மரம் இருக்கும் இடம். இந்த இடம் சென்றவுடன் இதற்கு மேல் என்னால் வர முடியாது நீங்கள் சென்று வாருங்கள் என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள் ரஃப்ரஃப் என்ற பட்டு விரிப்பு வந்தது அதில் ஏறி அங்கு இருந்து அர்ஷ் குர்ஸ் அருகில் சென்று அல்லாஹ்வை பார்த்தார்கள்.
ثُمَّ دَنَا فَتَدَلّٰىۙ
பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார். (அல்குர்ஆன் : 53:8)
فَكَانَ قَابَ قَوْسَيْنِ اَوْ اَدْنٰى
(வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.(அல்குர்ஆன் : 53:9)
அல்லாஹ்வை நீண்ட நாட்களுக்கு பின் சந்திப்பது
இரு காதலர்கள் போனில் பேசி இருக்கிறார்கள் சந்தித்தது இல்லை நீண்ட நாட்களுக்கு பின் இப்போது தான் பார்க்கிறார்கள் என்றால் எப்படி இருக்கும் ? பேச்சு வராது. அது போன்று நீண்ட நேரம் அமைதியாக இருந்தார்கள்.
அல்லாஹ்விற்கு அத்தஹிய்யாத் காணிக்கை செலுத்தினார்கள்
அல்லாஹ் சொன்னான்…அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அங்கும் தன் உம்மத்தை நினைத்தார்கள். முதலில் பாவிகளை தான் நினைத்தார்கள் எங்கள் மீது முதலில் அஸ்ஸலாமு அலைனா அதன் பின் நல்லோர்களை நினைத்தார்கள். வ.அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்.
அந்த நேரத்தில் மலக்குமார்கள் அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு என்று கூறினார்கள்.
தொழுகையை மட்டும் ஏன் அல்லாஹ் அங்கே அழைத்து கொடுத்தான்?
நோன்பு ஜக்காத் ஹஜ் போன்ற மற்ற பல கடமைகள் இருந்த போதும். அல்லாஹ் இதை மட்டும் ஏன் அங்கு அழைத்து போய் கொடுத்தான் .?
நம்முடைய அத்தாட்சிகளை காட்ட வேண்டும் நம் வல்லமை காட்ட வேண்டும் ஆற்றலை காட்ட வேண்டும். அதனால் தான் அழைத்துச் சென்றான்.
அங்கே மலக்குமார்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நெருக்கமாக பார்த்தார்கள்.
மலக்குமார்கள் வணக்கம் தொழுகை திக்ர் நின்ற நிலையில் இருந்து கொண்டே இருப்பார்கள்.
சில மலக்குமார்கள் ருக்கூஃவிலே குனிந்தே இருப்பார்கள்.
சில மலக்குமார்கள் ஸுஜூதிலே இருப்பார்கள்.
சில மலக்குமார்கள் அத்தஹிய்யாத்தில் இருப்பார்கள்.
இப்படியே தான் அவர்கள் காலம் காலமாக நின்று கொண்டே காலம் காலமாக ஓதிக்கொண்டே குனிந்து கொண்டே இருக்கிறார்களே அல்லாஹ் சொன்னால் இவர்கள் அதை அப்படியே அதை மட்டும் தான் செய்வார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆச்சரியம் காலம் காலமாக இவர்கள் எப்படி இருக்கிறார்கள்?
நான் உங்களின் உம்மத்திற்கு இதை அனைத்தையும் சேர்த்து தருகிறேன் தொழுகை அதில் இது அத்தனையும் ஒருங்கிணைந்து உள்ளது எல்லாம் மலக்குமார்களும் சேர்ந்து செய்யக்கூடிய அமல்களை உங்களுக்கு நான் தருகிறேன் லட்சக்கணக்கான மலக்குமார்கள் செய்யும் அந்த தொழுகையை இபாதத்தை நாம் செய்கிறோம்.
தொழுகும் போது நமக்கு அந்த சிந்தனை வர வேண்டும் எல்லா இபாதத்தையும் நாம் சேர்ந்து செய்கிறோம் அதில் கவனம் செலுத்த வேண்டும். நான் உம்மத் முஹம்மதியாவை மலக்குமார்களை விட சிறப்பு படுத்தினேன்.
மனிதன் சிறந்தவனா? மலக்கு சிறந்தவர்களா?
மனிதர்கள் தான் சிறந்தவர்கள் மலக்குமார்களுக்கு ஆசை இல்லை அல்லாஹ் எதை சொன்னானோ அதை மட்டுமே அவர்கள் செய்வார்கள் அறிவு மட்டுமே அவர்களிடம் உண்டு ஆசை இல்லை. தெரியப்படுத்துவது கட்டுப்படுத்துவது கஷ்டம்.
உதாரணமாக:-
செல்போன் பார்த்துக் கொண்டிருக்கிறோம் முக்கியமான செய்தி பார்த்து கொண்டு இருக்கிறோம் பாங்கு சொல்லி விட்டார்கள் நாம் நினைத்தால் அதை உடனே நிறுத்தி விட்டு அல்லாஹ்வை வணங்க நாம் செல்லலாம். அப்படியே இருந்து விட்டால்?
இரண்டும் நம்மிடம் தான் உள்ளது.நாம் வீட்டில் தொழுது கொண்டிருக்கிறோம் உள்ளே சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள் கிச்சனில் இருந்து சிக்கன் வாசம் வருகிறது சிந்தனை மாறுகிறது.
பள்ளியில் தொழுகிறோம் வெளி உலக சிந்தனை நமக்கு வருகிறது.
அவர்களுக்கு லேசு நமக்கு கஷ்டம் நற்செயல் செய்ய உள்ளத்தை கட்டுப்படுத்தி அல்லாஹ் சொன்னான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் என்று நாம் செய்வது அதுதான் மிகப்பெரிய விஷயம். என்று நாம் நடந்தால் சிறந்தவர்களாக ஆக முடியும்.
அது போல தான் மனிதர்கள் எல்லாம் இருந்தும் ஆசையை கட்டுப்படுத்தி இறைவனை வணங்கும் போது மலக்கு மார்களை விட சிறந்தவனாக முடியும் அதே போல் ஆசையை அதிகமாகி அதில் மூழ்கி பாவம் அதிகமாகும் போது அவன் ஷைத்தானை விட மோசமானவனாக ஆகிவிடுகின்றான்.
உம்முஹானி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டிற்கு மிஃராஜ் சென்று விட்டு திரும்ப வந்து விட்டார்கள் தாழ்ப்பாள் ஆடி முடிவதற்குள் வந்துவிட்டார்கள்.
படுக்கையில் உடல் சூடு அடங்குவதற்குள் மிஃராஜ் சென்று திரும்பி வந்துவிட்டார்கள்.
இதை வெளியே போய் சொல்லப் போகிறேன் என்று சொன்ன போது உம்முஹானி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சொன்னார்கள் போக வேண்டாம் யாரும் நம்ப மாட்டார்கள் என்று தடுத்தார்கள். போய் சொன்னா என்ன நடக்கும் என்று தெரியும் இருந்தாலும் போய் சொன்னார்கள்.
சிலர் கேட்டனர் பைத்துல் முகத்திஸில் எத்தனை ஜன்னல் எத்தனை கதவு எத்தனை விளக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திகைத்து விட்டார்கள் நபியை அவர்களுக்கு நேரடியாக பைத்துல் முகத்தஸின் காட்சியை அல்லாஹ் காட்டினான் நேரடியாக பார்த்து பதில் சொன்னார்கள்.
சிலர் கேட்டனர்:- வியாபாரக் குழு பார்த்தீர்களா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ரவ்ஹா என்னும் இடத்தில் பார்த்தேன் அதில் ஒருவர் ஒட்டகத்தை காணோம் என்று தேடினார் அங்கே தண்ணீர் இருந்தது அங்குள்ள தண்ணீரில் தேவை உள்ளவருக்கு நான் உதவி செய்தேன்.
எப்போது அந்த வியாபார கூட்டம் இங்கு வரும்?
புதன்கிழமை அந்த வியாபாரக் கூட்டம் வரும் என்று கூறினார்கள் அதுபோல வந்தது அவர்களும் உண்மையைச் சொன்னார்கள்.
அல்லாமா இப்னு கஸீர் ரஹ் கூறுகின்றனர்:-
விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட) அந்த இரவில் பல சான்றுகள் பல விஷயங்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அவற்றை அல்லது அவற்றில் சிலவற்றை மற்றவர்கள் கண்டால் திகைத்துப் போயிருப்பார்கள். அல்லது அறிவு சுவாதீனமாகியிருப்பார்கள். எனினும் நபியவர்கள் எவ்வித பதற்றமின்றி அமைதியானவர்களாகவே இருந்தார்கள். ஆயினும், அவர்கள் விவகாரம் வெளிப்பட்டு, தாம் பார்த்ததை தம் சமூகத்தினருக்குத் தெரிவிக்கும்போது தம்மை பொய்யர் என கருதுவர் என்று அஞ்சுபவர்களாக இருந்தார்கள். எனவே, அவர்கள் அந்த இரவில் பைத்துல் மக்திஸ் பள்ளிவாசலுக்குச் சென்று வந்ததை மட்டுமே முதலில் கூறி, நிதானத்தை மேற்கொண்டார்கள். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா
மிஃராஜ் இரவில் நபி ஸல் அவர்கள் பார்த்த சில நிகழ்வுகள்:-
குர்ஆனை மனனம் செய்து மறந்தவன் கடமையான தொழுகையை விட்டவன்
🩸நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்றிரவு மிஃராஜ் பயணத்தில் இரு வானவர்கள் என்னிடம் வந்து என்னை எழுப்பி, நடங்கள் என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருங்கிணைத்து படுத்து கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரது தலைமாட்டில் ஒரு பாறாங்கல்லை வைத்துக்கொண்டு மற்றொரு மனிதர் நின்று கொண்டிருந்தார். அவர் அந்தக் கல்லைப் படுத்திருக்கும் மனிதரின் தலையில் போட, அது அவரது தலையை நசுக்கிவிடுகிறது. பின்னர் அந்தக் கல் அடித்தவரை நோக்கி உருண்டு வர, அவர் பின் தொடர்ந்து சென்று கல்லை எடுத்துக்கொள்கிறார்.
மறுபடியும் அவர் வந்து சேர்வதற்குள் படுத்திருந்தவரின் தலை முன்பிருந்ததைப் போன்றே நல்ல நிலைக்கு மாறிவிடுகிறது. அதன் பிறகு அங்கு வந்து முதல் தடவை செய்ததைப் போன்றே அவர் மீண்டும் செய்கிறார். நான் அவர்கள் இருவரிடமும், "அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ( يُثْلَغُ رَأْسُهُ بِالْحَجَرِ، فَإِنَّهُ الرَّجُلُ يَأْخُذُ الْقُرْآنَ فَيَرْفُضُهُ وَيَنَامُ عَنِ الصَّلاَةِ الْمَكْتُوبَةِ ) "கல்லால் தலை நசுக்கப்பட்ட அந்த மனிதன் குர்ஆனை (மனனம் செய்து) எடுத்துக்கொண்டு விட்டுப் பிறகு அதையும் (மறந்து) விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான்" என்று கூறினர். அறிவிப்பாளர்:- சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் நூல்:- புகாரி.
ஜகாத் கொடுக்காதவர்கள்
🩸நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் மிஃராஜ் பயணத்தில் செல்லும் வழியில் ஓர் இடத்தில் சிலர் கந்தல் துணிகளால் கோவணம் கட்டிக்கொண்டவாறு விலங்குகளைப் போல் எரி நரகின் கற்களையும் நரகக் கள்ளிகளையும் மேய்ந்து கொண்டிருந்தனர். நான், "இவர்கள் யார்?" என்று வினவினேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவர்கள்தாம் (செல்வந்தர்களாக இருந்தும் தன் மீது விதிக்கப்பட்ட) ஸகாத்தை வழங்க மறுத்தவர்கள்" என்று கூறினார். நூல்:- நஷ்ருத்தீப்.
அடுத்தவர்களின் உரிமைகள் கொடுக்காதவர்கள்
🩸நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் மிஃராஜ் பயணத்தில் செல்லும் வழியில் ஓர் இடத்தில் ஒரு மனிதன் தென்பட்டான். அவன் தன்னால் சுமக்க முடியாத அளவுக்கு விறகுகளை சேமித்து வைத்துக்கொண்டு, மேலும் மேலும் விறகு பொறுக்கிக் கொண்டிருக்கிறான். நான், "இவன் யார்?" என்று வினவினேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவனும் உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவனாவான். இவன் மீது பிறருக்குச் சேர வேண்டிய உரிமைகளும், கடன்களும் ஏராளமாக இருக்கின்றன. அவை போதாது என்று, மேலும், பிறர் உரிமைகளையும் பொருள்களையும் கவர்ந்து தம்மீது அதிகச் சுமையை ஏற்றிக்கொள்பவன்" என்று கூறினார். நூல்:- நஷ்ருத்தீப்
பிறருக்கு மட்டும் உபதேசம் செய்பவர்கள்
🩸 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(مَرَرْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَى أُنَاسٍ تُقْرَضُ شِفَاهُهُمْ وَأَلْسِنَتُهُمْ بِمَقَارِيضَ مِنْ نَارٍ )
நான் (மிஃராஜ் எனும் விண்ணுலகப்பயணத்திற்கு) அழைத்துச் செல்லப்பட்ட அந்த இரவில் ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன். அவர்களின் உதடுகள் மற்றும் நாவுகள் நெருப்புக் கத்தரிக்கோல்களால் துண்டிக்கப்பட்டு கொண்டிருந்தன.
நான், ( مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ؟ ) "ஜிப்ரீல்! இவர்கள் யார்?" என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், ( هَؤُلَاءِ خُطَبَاءُ أُمَّتِكَ، الَّذِينَ يَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَيَنْسَوْنَ أَنْفُسَهُمْ ) “இவர்கள் தான் உங்கள் சமுதாயத்தின் சொற்பொழிவாளர்கள் ஆவர்; இவர்கள், நன்மை புரியுமாறு பிறருக்கு உபதேசித்துவிட்டுத் தங்களை மறந்துவிட்டார்கள்ஆகும்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் இப்னு மர்தவைஹி.
வட்டி உண்பவர்கள்
🩸நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:- ஓர் இரவில் நான் (மிஃராஜ் எனும்) இரவு பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மக்களில் சிலரைக் கடந்து சென்றேன். அவர்களின் வயிறுகள் வீடுகளைப்போன்று (பெரிதாக) இருந்தன அவற்றினுள் பாம்புகள் இருந்தன. அவர்களின் வயிறுகளுக்கு வெளியிலிருந்தே அவை தெரிந்தன. நான், "ஜிப்ரீல்! இவர்கள் யார்?" என்று கேட்டேன். அவர், "இவர்கள் தான் வட்டி வாங்கி உண்டவர்கள்" என்று கூறினார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா
விபச்சாரம் செய்பவர்
🩸நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-மிஃராஜ் பயணத்தில் இரு வானவர்கள் என்னிடம் வந்து என்னை எழுப்பி நடங்கள் என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சமும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப்பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தனர். அங்கு அவர்களுக்குக் கீழே இருந்து தீப்பிழம்பு ஒன்று (மேலே) வருகிறது. அந்தப் பிழம்பு அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகின்றனர். நான் அவ்விரு வானவர்களிடம், "இவர்கள் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இவர்கள் விபச்சாரம் புரிந்த ஆண்களும் விபச்சாரம் புரிந்த பெண்களும் ஆவர்" என்று கூறினர். அறிவிப்பாளர்:- சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் நூல்:- புகாரி
🩸நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-நான் மிஃராஜ் பயணத்தில் செல்லும் வழியில் ஓர் இடத்தில், பெண்களில் சிலர் தூய்மையான இறைச்சியை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் (இருப்பதை உண்பதற்கு) யாரும் நெருங்கவில்லை. (மற்றொரு இடத்தில்) பெண்களில் சிலர் துர்நாற்றம் வீசும் இறைச்சியை வைத்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் இருப்பதை மக்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். நான் "ஜிப்ரீல்! இவர்கள் யார்?" என்று கேட்டேன். அவர், "இவர்கள் உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அனுமதிக்கப்பட்டதை (தமது மனைவியரை) தவிர்த்துவிட்டு, தடுக்கப்பட்டதின் (கள்ள உறவின்) பக்கம் சென்றவர்கள்" என்று கூறினார். நூல்:- முஸ்னது.
அனாதைகளின் பொருளை உண்ணக்கூடியவர்கள்
🩸நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-நான் விண்ணுலப் பயணத்தின்போது ஒரு கூட்டத்தைக் கண்டேன். அவர்களுடைய உதடுகள் ஒட்டகத்தின் உதடுகளைப் போல் (பெரியதாகவும் தாடைகள் பிளந்தும்) இருந்தன. அவர்களின் அத்தகைய உதடுகளை பிடித்திழுத்து, அவர்களது வாயினுள் நெருப்புக் கங்குகளை திணிக்கப்படுகிறது. அது அவர்களது (வாயினுள் நுழைந்து) கீழ் வழியாக வெளியேறுகிறது. இவ்வேதனையைச் செய்வதற்கென்றே சில காவலாளிகள் அவர்கள் மீது சாட்டப்பட்டிருக்கின்றனர். அவர்கள் (அந்த வேதனையை தாங்க இயலாமல்) குனிந்த நிலையில் கதறுகின்றார்கள்.
நான், "ஜிப்ரீல்! இவர்கள் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இவர்கள் அநாதைகளின் செல்வங்களை முறைகேடாக உண்போர் தங்கள் வயிற்றுக்கு நெருப்பையே உண்கிறார்கள். விரைவில் அவர்கள் கொழுந்துவிட்டெரியும் (நரக) நெருப்பில் நுழைவார்கள்” (4:10) என்ற வசனத்தை ஓதினார். நூல்:- தஃப்சீர் தபரீ,
புறம் பேச கூடியவர்கள்
🩸நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:- மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்து செல்லப்பட்டபோது நான் ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினாலான நகங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு அவர்கள் தங்களுடைய முகங்களையும் நெஞ்சங்களையும் பிறாண்டிக்கொண்டிருந்தார்கள். அப்போது நான், "ஜிப்ரீல்! இவர்கள் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இவர்கள்தாம் (புறம் பேசுவதன் மூலமாக) மக்களின் மாமிசத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்; மேலும், மக்களை அவமானப்படுத்திக் கொண்டுமிருந்தார்கள்" என்று கூறினார். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்
வதந்தியை பரப்புபவன்
🩸நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:- மிஃராஜ் பயணத்தில்) இரு வானவர்கள் என்னிடம் வந்து என்னை எழுப்பி நடங்கள் என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் சென்று கொண்டிருந்தபோது, மல்லாந்து படுத்திருந்த ஒரு மனிதரை அடைந்தோம். அவரது தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒரு பக்கமாகச் சென்று கொக்கியால் அவனது முகவாயை பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரது மூக்குத் துவாரத்தையும் கண்ணையும் பிடரிவரை கிழித்தார். அல்லது அவர் பிளந்தார். பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆகிவிடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்கு செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார்.
நான், "அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அந்த மனிதன் அதிகாலையில் தமது வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்று ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ
🍷 மது 🍷
🩸நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:- நான் மிஃராஜ் பயணத்தில் செல்லும் வழியில் ஓர் இடத்தில் சிலர், விபச்சாரிகளிடம் (உறுப்பில்) இருந்து வெளிவரக்கூடிய சீழ் சலத்தை பருகிக் கொண்டிருந்தனர். நான், "இவர்கள் யார்?" என்று வினவினேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள்,“இவர்கள், உலகத்தில் தடைசெய்யப்பட்ட மதுவை அருந்தும் பழக்கமுடையவர்கள்” என்று கூறினார்.
🍼குழந்தைகளுக்கு பாலூட்ட மறுப்பவர்கள்🍼
🩸நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு நாள் நான் உறங்கிக் கொண்டிருந்தபோது என்னிடம் இருவர் (வானவர்கள்) வந்து (மிஃராஜ் பயணத்தில்) என்னை கரடு முரடான ஒரு மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பாம்புகள் சில பெண்களின் மார்பகங்களை கொட்டிக் கொண்டிருந்தன. நான் “இவர்களின் நிலை என்ன?” என்று கேட்டேன். அவர்கள், "இவர்கள் தான் தம் குழந்தைகளுக்கு (மார்பகங்களில்) பால் கொடுக்க மறுத்தவர்கள்" என்று கூறினர். அறிவிப்பாளர்:- அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான், ஹாகிம்,
மிஃராஜ் விண்ணேற்றத்தில் பயணத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெற்று தந்த ஐங்கால தொழுகைகளை விடாது தொழுது அடுத்துள்ள நோன்பை நோற்று ஜகாத் கொடுத்து ஹஜ் பாக்கியமும் பெற்று நீக்கமற நிறைந்துள்ள இறைவனின் அருளால் இம்மை மறுமை இரண்டிலும் நன்மையை அடைந்து கொள்வோம் அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக ஆமீன்.